search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை சேலம் பசுமை சாலை திட்டம்"

    சென்னை-சேலம் பசுமை சாலைக்காக சேலம் அருகே 5-வது நாளாக நிலம் அளவிடும் பணி நடந்தது. அப்போது விவசாய நிலம் பறிபோவதாக கூறி அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு விவசாயிகள் கதறி அழுதனர். #greenwayroad #Farmers
    சேலம்:

    சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை அமைப்பதற்காக சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களை அளவிடும் பணி நேற்று 5-வது நாளாக நடந்தது.

    சேலம் அருகே உள்ள உடையாப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வாழைத்தோப்பு பகுதியில் நேற்று காலை நில அளவீடு செய்யும் பணி தொடங்கியது. நில எடுப்பு தாசில்தார் பெலிக்ஸ்ராஜா தலைமையில், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், தேசிய நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் அங்கு நிலம் அளவீடு செய்து எல்லைக்கல் பதித்தனர்.

    அந்த பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்ற விவசாயிக்கு சொந்தமான 2 ஏக்கர் மாந்தோப்பு நிலம் முழுவதும் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த நிலத்தை அதிகாரிகள் அளவீடு செய்த போது அண்ணாமலையின் மனைவி கன்னியம்மாள் அங்கு உட்கார்ந்து, “தோப்பு முழுவதும் பறிபோகிறதே, கடந்த சில ஆண்டுகளாகத்தான் மா அறுவடை செய்து அதை விற்று, அந்த பணத்தின் மூலம் பிழைப்பு நடத்துகிறோம். அதற்குள் எங்கள் வாயில் மண்ணை போட்டு விட்டீர்களே” என்று கூறி ஒப்பாரி வைத்து கதறி அழுதார்.

    அங்கிருந்த அதிகாரிகளும், அவரது உறவினர்களும் அவரை சமாதானப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கந்தாஸ்ரமம் பின்புறம் வரகம்பாடி செல்லும் சாலையில் நில அளவீடு செய்யும் பணி நடந்தது.

    அங்கிருந்த பெண்கள், விவசாயிகள் அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு கதறி அழுதனர். இதேபோல் எருமாபாளையம் பகுதியில் நில அளவீடு செய்யும் பணி நடந்தபோது அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் நின்று கொண்டு “நம் நிலம் நம்மை விட்டு போகப்போகிறதே” என்று கூறி கதறி அழுததுடன், சோகமாக காணப்பட்டனர்.

    நிலம் அளவீடு செய்யும் பணியின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. #greenwayroad #Farmers
    ×